புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு பேசினார்.
குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த 3-ம் நாளன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.
இந்நிலையில் 5-ம் நாளான இன்று (ஆக. 31) புதுச்சேரியில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அவ்வை திடலில் முக்கிய சாலைகள் வழியாக மேள தாளங்களோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதுச்சேரி கடற்கரை சாலை பழைய நீதிமன்றம் அருகே கொண்டு வரப்பட்டன.
அங்கு நடந்த மகா ஆரத்தி நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வேட்டி, சட்டையுடன் பங்கேற்று தாமி தரிசனம் செய்தார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார்,
பாஜக தலைவர் ராமலிங்கம், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து தொடர்ந்து அரசு அனுமதி அளித்த இடத்தில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
முன்னதாக, கடற்கரை சாலையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு பேசும்போது, தமிழகம், புதுச்சேரி இரண்டும் தமிழ்மண். நாம் தமிழ்த்தாயின் பிள்ளைகள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு நிறைய கெடுபிடிகள் உள்ளன. ஊர்வலம் நடத்துவது என்பதே சவாலானது. தமிழகம் ஆன்மிக பூமி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இங்கு இந்துமத சாமி ஊர்வலத்துக்கு ஏன்? இவ்வளவு பிரச்சினைகள். அதற்கு ஆளும் கட்சி காரணமா, ஆட்கள் காரணமா என்ற கேள்விக்குறி எழுகிறது.
புதுச்சேரியில் விநாயகர் ஊர்வலம் எந்தவித சங்கடமும் இல்லாமல் நிம்மதியாக நடைபெறுகிறது. இந்து மதம் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல். இதனை வெறும் பக்தி என்று மட்டும் தவிர்த்துவிட முடியாது. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது தான் இந்து மதம்.
தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது. தமிழகத்தில் ஆன்மிகம் என்பது பட்டு வேட்டி மாதிரி. அதில் எங்காவது சிறு கறுப்பு கரை பட்டிருக்கலாம். அந்த சிறு கரைதான் நாத்திகம். சிலர் சாமி இல்லை எனலாம். அது அரசியலாக மாறிவிட்டது.
நிறைய கட்சிகள் நாத்திக கொள்கைபோன்று காட்டிக்கொண்டால் அரசியலுக்கான தகுதியாக நினைக்கின்றனர். பெரியார் மண் என்று பலர் கூறுகின்றனர். பெரியார் மண் அல்ல. இது அகத்தியர், விவேகானந்தர், பாரதியார் மண். இது ஆன்மிக பூமி.
இங்கு சாமி இல்லை என்று சொல்லி இந்த மண்ணை கலங்கப்படுத்தாதீர்கள். சாமி பிடிக்கவில்லை என்றால், கும்பிட வேண்டாம். சாமி கும்பிடுபவர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. ராஜராஜ சோழன், மருதுபாண்டியன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் எல்லா மன்னர்களும் அவரவர் ஆண்ட மண்ணில் கோயில் கட்டினர்.
அவர்களிடம் பக்தி இருந்தது. கோயில் கட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தது. ஆனால் ஒற்றுமையில்லை. அது இருந்திருந்தால் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் வந்திருக்க மாட்டார்கள். கோயில்களுக்கு குழந்தைகள் வருவது குறைந்து வருகிறது.
பிற மதங்களில் குழந்தைகள் அவர்கள் வழிபடும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகவே குழந்தைகளை பெற்றோர் கோயில்களுக்கு கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். இந்து மதம் சம்பந்தமாக நிறைய கதைகள் இருக்கின்றன. அதனை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். பக்தி குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.