தமிழகத்தைப் போலவே 2026-ல் தேர்தலைச் சந்திக்கும் புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அங்கு, தற்சமயம் எந்தக் கட்சியிலும் இல்லாத சில முக்கியத் தலைவர்கள் சேர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் இந்நாள் முதல்வர் ரங்கசாமியும் இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருப்பது தான் இப்போது ஹாட் டாபிக்!
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, இம்முறையும் அதே கூட்டணியில் தொடர வேண்டும் என நினைக்கிறது. ஆனால், பாஜக உடன் அடிக்கடி முரண்டு பிடிக்கும் ரங்கசாமி, கூட்டணி விவகாரத்தில் இன்னும் மவுனம் கலைக்காமலேயே இருக்கிறார். கடைசி நேரத்தில் விஜய்யை வைத்து அவர் ஒரு புதுக்கணக்குப் போட்டாலும் போடலாம் என்கிறார்கள். இதே கூட்டணியில் இருக்கும் அதிமுக-வும் ஒருவிதமான ஊசலாட்டத்திலேயே இருக்கிறது.
காங்கிரஸ் – திமுக கூட்டணியும் அடிக்கடி கலகக் கூட்டணியாக கலர் மாறிவருகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 எங்களுக்கு வேண்டும் என இரண்டு கட்சிகளுமே இப்போது பங்குபோட்டு பேசி வருகின்றன. கேட்டது கிடைக்காவிட்டால் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் தயார் என கெத்தாகவே சொல்கிறது காங்கிரஸ். இதனால், இதே கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றன. இவர்களுக்கு மத்தியில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் புதிதாக ஒரு அணியை உருவாக்கவும் சிலர் முஸ்தீபு காட்டி வருகிறார்கள்.
இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் தான் 30 தொகுதிகளிலும் எந்தக் கட்சியிலும் இல்லாமல் ஒதுங்கி இருக்கும் அரசியல் தலைகளை எல்லாம் ஒருங்கிணைத்து புதிதாக இன்னொரு கட்சியைக் கட்டமைக்க சிலர் கூட்டம் போட்டுப் பேசி வருகிறார்கள். சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு, முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான அசானா, காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான ப.கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் அண்மையில் இது தொடர்பாக ரகசிய சந்திப்பு ஒன்றையும் நடத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு, “புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. இதற்கு முன்பு மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் – திமுக கூட்டணியும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவர்கள் போதாதென்று புதிதாக மாட்டினின் மகனும் தேர்தலுக்காக தனியாக ஒரு அணியை உருவாக்கி வருகிறார்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு டெல்லியில் இருந்து கட்டளை இடுகின்றனர். திமுக-வுக்கு சென்னையில் இருந்து உத்தரவு வருகிறது. பாஜக-வுடன் கூட்டணி வைத்ததில் இருந்து ரங்கசாமியின் தனித்தன்மையும் போய்விட்டது. பாஜக-வுக்கு பி டீமாக மார்ட்டின் அணி வருகிறது. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் இடத்தில் மக்களை வைத்திருக்கக்கூடாது. அதனால், ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசியல் களத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஆளும் கட்சியிலும் ஆண்ட கட்சியிலும் ஒதுக்கிவைக்கப்பட்டு மனப்புழுக்கத்தில் இருக்கும் பலரும் எங்களோடு வர தயாராக இருகின்றனர். விரைவில் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய கட்சியை தொடங்க உள்ளோம்” என்றார்.
மாநில பாஜக முன்னாள் தலைவரான சாமிநாதன் நம்மிடம், “ஊழல் இல்லாத புதிய முகங்களைக் கொண்டு என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், சார்லஸ் மார்டின் இல்லாத அரசை அமைக்க இப்போதைக்கு 15 பேர் தயாராக இருக்கிறோம். இன்னும் சில முக்கிய தலைவர்களும் எங்களோடு வரவிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தீபாவளிக்குப் பிறகு தீவிரப்படுத்த உள்ளோம். புதுச்சேரி மக்களுக்கு ஏதேனும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்காக, ரங்கசாமி, நாராயணசாமி இல்லாத ஒரு புதிய அரசியல் மாற்றத்தை புதுச்சேரியில் கொண்டுவரப் போகிறோம்” என்றார்.
அண்மைக் காலமாகத் தான் புதுச்சேரியை ஆளும் அரசுகள் தமது ஆயுட் காலத்தை முழுமையாக நிறைவு செய்து வருகின்றன. புதுச்சேரியில் இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தால் அடுத்து அமையும் ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசாய் தான் இருக்கும் போலிருக்கிறது!