சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27), அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு பிஎன்எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்றதொரு லாக்-அப் மரணம் கடந்த 2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் அரங்கேறியது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி போலீஸாரால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, ஹரிஷ் கல்யாண், ஜி.வி.பிரகாஷ், ப்ரியா பவானிசங்கர், ரவி மோகன், அசோக் செல்வன் என பலரும் தங்கள் அழுத்தமான கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட கண்டனச் செய்தியில் இடம்பெற்ற #சத்தியமா_விடவே_ கூடாது என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ள மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரணம் குறித்து இவர்களில் யாரும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற போலீஸ் சித்ரவதைக்கு எதிரான படங்களில் நடித்த சூர்யா, ரஜினிகாந்த் போன்றோர் இந்த விவகாரம் குறித்து அமைதியாக இருப்பது குறித்தும் பலர் விமர்சித்து வருகின்றனர்.