சென்னை: சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளிவிட்டதாகவும், கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின் இருந்து தான் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஜூலை 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்த் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது’ எனக் கூறி, ‘புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், ‘கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ‘பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ‘சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை எவரேனும் தடுத்தால், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும்’ என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.