சென்னை: சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு மற்றும் சாதி, மத மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக கட்சிகளின் சார்பில் கூட்டாக தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று (06.08.2025) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இச்சந்திப்பின் போது முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், ‘தமிழ்நாட்டில் சாதி, மத மறுப்பு திருமணத் தம்பதிகள் தொடர்ச்சியாக சாதி ஆணவக் கொலைகளுக்கு ஆளாவதும், சாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்ந்து வருகின்றன. சமூக சமத்துவ கண்ணோட்டத்திலும் பகுத்தறிவு சிந்தனையிலும் தாங்கள் தேர்வு செய்து கொள்ளும் வாழ்க்கையை அமைதியாக தொடர இயலாத அவலநிலைக்கு தீர்வு காண, வலிமை மிக்க தனி சிறப்புச் சட்டங்கள் இன்றியமையாத் தேவை என்பதால், அது தொடர்பான கோரிக்கைகளை தங்களின் தனிக் கவனத்துக்கும், விரைவான நடவடிக்கைக்கும் முன் வைக்கிறோம்.
சனாதன, வர்ணாசிரம கருத்தியலும், சாதிக் கட்டமைப்பும் பாதுகாக்கப்படுவதற்கான வழிமுறையாக இந்திய சமூகத்தில் அகமண முறை விளங்குகிறது. ஆகவே சாதி மறுப்புத் திருமணங்கள் கொடூரமான வன்முறைகளுக்கு இலக்காகி வருகின்றன. அண்மையில் சாதி ஆணவக் கொலைக்கு ஆளான 27 வயது கவின் செல்வ கணேஷ் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளம் உயிர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பலியாகியுள்ளனர். விருத்தாசலம் கண்ணகி முருகேசன், உசிலம்பட்டி விமலாதேவி, சூரக்கோட்டை அபிராமி, ஓசூர் நந்தீஸ் – சுவாதி, கிருஷ்ணகிரி சுபாஷ் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சாதி ஆணவக் கொலைகள் தனி நபர்களால் அல்லது ஒரு குடும்பத்தினரால் மட்டும் நடத்தப்படுவதில்லை. பெற்றோர் மீதான சமூகத்தின் நிர்ப்பந்தம், சாதி ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல், கட்டப் பஞ்சாயத்து, கௌரவம் – சாதித் தூய்மை போன்ற கருத்தாக்கம் ஆகியனவும் இவற்றின் பின்புலமாக உள்ளன. ஆகவே ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்கள் மட்டும் இவற்றைத் தடுக்க போதுமானதாக இல்லை.
நமது அரசமைப்பு சட்டம் திருமணத்திற்கான இணையை தெரிவு செய்து கொள்ளும் உரிமையை திருமண வயதை எட்டிய ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறது. இதற்கு எதிரான நிர்ப்பந்தங்களையும், வன்முறைகளையும் தண்டனைக்கு உள்ளாகும் விதமாக வலிமையான சிறப்புச் சட்டம் காலத்தின் தேவையாக முன் வந்துள்ளது .இதன் மூலமாகவே தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும் என உறுதியாக நம்புகிறோம். இதன் தேவை குறித்து ஆய்வு செய்த சட்ட நிபுணர்களால், சமூக ஆய்வாளர்களால், சமூக செயற்பாட்டாளர்களால், பாதிக்கப்பட்டவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
1) தேசிய பெண்கள் ஆணையம் முன் மொழிந்த நகல் சட்டம் “கௌரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பேரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை தடுக்கும் சட்ட வரைவு” (The Prevention of Crimes in the Name of ‘Honour’ & Tradition Bill, 2010.)
2) 2012 இல் இந்தியச் சட்ட ஆணையம் இத்தகைய சிறப்புச் சட்டம் வேண்டுமென்பதை “திருமண இணைத் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் தலையிடுவதை தடுப்பதற்கு பரிந்துரைக்கப்படும் சட்ட கட்டமைப்பு” [Prevention of Interference with the Freedom of Matrimonial Alliances (in the name of Honour and Tradition): A Suggested Legal Framework.] என்கிற தனது 242 வது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
3) 2015 – தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்ட மன்றக் குழு தலைவர் அ.சவுந்தரராசன் சமர்ப்பித்த “கௌரவக் கொலைகள் தடுப்பு” தனி நபர் சட்ட வரைவு
4) சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வி. ராமசுப்பிரமணியம் தீர்ப்பு. (ரிட் மனு 26991/2014/13.04.2016). மாவட்டம் தோறும் சிறப்பு செல்கள், 24×7 ஹெல்ப் லைன், CCTNS நெட்வொர்க் உள்ளிட்ட பரிந்துரைகள்
5) விஜய் சாய் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினர் தாக்கல் செய்த தனி நபர் சட்ட வரைவு [The Prevention of Crimes in the name of Honour and Tradition and Prohibition of Interference with the Freedom of Matrimonial Alliances Bill, 2017]
6) சக்தி வாகினி (எதிர்) இந்திய அரசு (உச்ச நீதிமன்றம் – ரிட் மனு 231 (2010) – தீர்ப்பு 17.03.2018
7) ராஜஸ்தான் திருமண இணைத் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் குறுக்கிடுவதை தடுக்கும் சட்டம்.
[THE RAJASTHAN PROHIBITION OF INTERFERENCE WITH THE FREEDOM OF MATRIMONIAL ALLIANCES IN THE NAME OF HONOUR AND TRADITION BILL, 2019]
8. The Freedom for Marriage and Association and Prohibtion of Crimes in the name of Honour Bill, 2023
* இதுபோன்ற அறிக்கைகள், தீர்ப்புகள், ஆவணங்கள் சாதிய ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச் சட்டம் தேவை என்பதை போதுமான ஆதாரங்களுடன் முன் வைத்துள்ளன.
* சிறப்பு சட்டம் தேவை என்பதற்கான காரணங்களும் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.
சாதி மறுப்புத் திருமண தம்பதிகள் படுகொலைக்கு ஆளாகும் போது அது வெறும் கொலை வழக்காக பதியப்படாமல் சாதி ஆணவக் கொலைகள் என சட்டரீதியாக கூர் வகைப்படுத்துவது இது குறித்த தரவுகளை திரட்டுவதற்கும், விழிப்புணர்வை உருவாக்கவும், பொதுச் சமூகத்தில் இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான கருத்தை உருவாக்கவும் பயன்படும். 302 ஐ.பி.சி, 101 பி.என். எஸ் அடிப்படையில் கொலைகள் என்று மட்டும் கருதப்படுவது சாதிய ஆணவக் கொலைகளுக்கு பின்புலமாக இருக்கும் சமூக நிர்ப்பந்தத்தை கணக்கில் கொள்வதாக இல்லை.
நிரூபிக்கும் பொறுப்பை குற்றவாளியின் கடமை ஆக்குவதன் மூலம் படுகொலையை நிகழ்த்துபவர்கள் மட்டுமின்றி சாதி ஆணவக் கொலைகளை தூண்டும் கும்பல்கள், உறவினர்கள், கட்டப் பஞ்சாயத்தினரை பொறுப்பாக்க இயலும்.
சாதி மறுப்பு திருமண தம்பதியர்களில் கொலையாகிறவர் பட்டியல் சாதி அல்லாதவராக இருந்து, இணையர் பட்டியல் சாதியினராக இருந்தாலும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது. சாதி ஆணவக் கொலைகளில் சாதித் தூய்மைக்கான கடமை பெண்கள் மீது சுமத்தப்பட்டு பெரும்பாலும் பட்டியல் சாதி அல்லாத பெண்கள் உயிர் பறிப்புக்கு ஆளாகிறார்கள். இவ்வாறான குற்றங்களில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பெறுகிற உரிமை, வழக்கை விரைந்து நடத்தக் கோருகிற உரிமை,நிவாரணம் பெறுகிற உரிமை ஆகியவைகளுக்கு சட்டபூர்வ வழிமுறைகள் ஏதும் இல்லை.
வீட்டுக்குள் நடக்கும் சாதி ஆணவக்கொலைகளே அதிகம். குடும்ப உறுப்பினர்களே செய்யும் சாதி ஆணவக்கொலைக்கு சாட்சிகள் கிடைக்காது.குற்றவாளிகள் விடுதலை அடையும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது.
சாதி மறுப்பு தம்பதிகள் பாதுகாப்பு கோரும் சூழல்களில் எவ்வாறெல்லாம் மீறல்கள் காவல்நிலையங்களில் நடைபெறுகிறது என்பதற்கு சாட்சியம் உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் நடைபெற்ற தவறுகள் குறித்து தென்மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வுகள் மேற்கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஆகும்.
முதல் தகவல் அறிக்கையை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் (GD) பதிவு செய்யாதது, சட்டப்படி திருமண வயதை அடைந்த விமலா தேவி – திலிப் குமார் தம்பதியினரை அழைத்து வருவதற்கு, கேரளாவுக்கு சிறப்பு குழுவை அனுப்பியது தொடர்பாக நாட்குறிப்பில் பதிவு செய்யாதது, கேரளாவில் இருந்து அழைத்து வந்த விவரத்தையும் பதிவு செய்யாதது மட்டுமல்ல பின்னர் இடைச்செருகலாக அதனைப் பதிவு செய்தது, காவல் நிலையத்திலேயே கும்பலாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது, அதேபோல் வத்தலக்குண்டு காவல் நிலையத்திலும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்யாதது, நடுவர் நீதிமன்றத்தில் தம்பதியர்களை ஆஜர்படுத்த தவறியது, தம்பதியரை பிரித்து அனுப்பியது ஆகியன உதாரணங்கள்.
சாதி ஆணவக் குற்றங்களில் இரு தரப்பில் ஒருவர் பட்டியல் வகுப்பினராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்தக் குற்றங்கள் பட்டியல் வகுப்பினருக்கும் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மட்டும் நடக்கவில்லை. பட்டியல் சாதி அல்லாத வகுப்பினர்களுக்கு இடையிலும் கூட நடக்கின்றன. பட்டியல் சாதியினருக்கு இடையிலும் நடைபெறுகின்றன. இதை இந்தச் சிறப்புச் சட்டம் கவனத்தில் கொள்ளவேண்டும்”
இத்தகைய காரணங்கள், அனுபவங்கள் எல்லாம் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டம் தேவை என்பதையே உணர்த்துகின்றன.
தாங்கள் உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பையும், அமைதியான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது