மதுரை: சாதாரண பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல் உறுப்புகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது தொடர்பான மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கீழ அப்பிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “என் மனைவி அபிலாலினி. அவர் 2024-ல் கர்ப்பமடைந்தார். அவர் புதுக்கடை வெள்ளியம்மலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியில் மருத்துவமனையில் சேர்த்தோம். மனைவிக்கு மறுநாள் சாதாரண பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகும் என் மனைவி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். நான் போய் பார்த்தபோது என் மனைவி கைகள் கட்டப்பட்டிருந்தது. குழந்தையை பார்த்தபோது வலது பக்க கழுத்தில் வெட்டுக் காயம் இருந்தது. பிரசவத்துக்கு பிறகு என் மனைவிக்கு சிறுநீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. வயிற்றிலும் கடும் வலியும் ஏற்பட்டுள்ளது. மருத்துவரிடம் கேட்டபோது பிரசவத்தின் போது வழக்கமாக ஏற்படும் பாதிப்புகள் என கூறினார். சிறுநீர் வெளியேறுவது 90 நாளில் நின்றுவிடும் என்று கூறி 7 நாளில் மனைவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் என் மனைவியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. இன்னொரு மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றபோது பிரவசத்தின் போது என் மனைவியின் பிறப்பு உறுப்பு, சிறுநீர் குழாயில் தேவையில்லாமல் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது அவரால் அமரவோ, நடக்கவோ முடியவில்லை. இதனால் எங்கள் குடும்பம், உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு காரணமான மகப்பேறு மருத்துவர் மீது குற்ற வழக்கு பதியக் கோரி புதுக்கடை கவால் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாருக்கு மனு ரசீது வழங்கிய போலீஸார் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கமாறு மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அனுப்பியுள்ளேன். எனவே என் புகாரின் பேரில் வழக்கு பதிய போலீஸாருக்கும், மனைவிக்கு சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.நாராயண குமார் வாதிட்டார். மருத்துவ கவுன்சில் சார்பில் மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கையை மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்யவும், மனு தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் மனுதாரர் மனைவிக்கு சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.