தேர்தலுக்குத் தேர்தல் மத அரசியலை மறைமுகமாக பிரதிபலிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஓட்டுக் கட்டிடத்தை வைத்து மத மோதலுக்கு சிலர் விதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருவிதாங்கூர் மன்னர் பாலரவிவர்மா தனது உறவினர், நண்பர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1941-ல் குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் ஓட்டு கட்டிடத்தில் காசநோய் மருத்துவமனையை திறந்தார். இதுதான் இப்போது நவீனப்படுத்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதும் பழமை மாறாத பழைய ஓட்டு கட்டிடமானது பிறப்பு – இறப்பு பதிவாளர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிறிய அறையானது மன்னர் காலத்திலேயே கிறிஸ்தவர்களின் ஜெப அறையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை, ‘கிறிஸ்தவ சிற்றாலயம்` என்றும், இதைத் திறந்து மருத்துவமனைக்கு வரும் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இது தீராத பிரச்சினையாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பிரின்ஸ் இது தொடர்பாக அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது. பிரின்ஸ் தனது வீடியோவில், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயம் மூடப்படடிருக்கிறது. என்ன காரணம், எதற்காக மூடப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
சிகிச்சைக்கு போகிறபோது நோயை தீர்ப்பதற்கு இறைவனை வேண்டிக்கொள்வதற்கான இடம் தான் இந்த சேப்பல். ஏன் இந்த சிற்றாலயத்தைத் திறக்கக்கூடாது? அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
பிரின்ஸின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்துவோம் என இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளதால் பதற்றமடைந்திருக்கும் மத்திய – மாநில உளவு அமைப்புகள் மருத்துவமனையை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட்டில் குமரி மாவட்டத்துக்கு வந்திருந்த மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பாதிரியார் ஜோ அருண், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட ஆலயம் நீண்டகாலமாக திறக்கப்படாமல் உள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அந்த ஆலயத்திற்குச் சென்று தங்கள் உறவினர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டு வந்தார்கள்.
எனவே, இந்த ஆலயத்தை திறந்து பொதுமக்கள் வழிபாடு செய்ய குமரி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டார். அன்று மாலையே குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபக்குமார் தலைமையில் திரண்டு வந்த இந்து அமைப்பினர், மருத்துவக் கல்லூரி ஓட்டுக் கட்டிடம் முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
இதுகுறித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நாகர்கோவில் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா நம்மிடம் பேசுகையில், “மண்டைக்காடு மதக்கலவரத்தைப் போன்று இந்த தேர்தலில் உருவாக்கி ஆதாயம் தேட அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட பிரச்சினையை பிரின்ஸ் எம்எல்ஏ போன்றவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக முந்தைய மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நாகர்கோவில் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இங்கு சிற்றாலயம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனாலும், குமரி மாவட்ட அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.