சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது அரசு வாகனத்தை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டதாகவும், உரிய ஆணை இல்லாமல் வழங்க முடியாது என்று கூறியதால், வெளியூர் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவிட்டு, வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், அலுவலகத்துக்கு நடந்தே சென்றதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
அவர் வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிஎஸ்பி, தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடத்தை விதிகளை மீறியும், உரிய அனுமதியின்றியும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது, காவல் துறையினருக்கான நடத்தை விதிகளை தொடர்ந்து மீறியிருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
“என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் சுந்தரேசன். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.