கோவை: சவுக்கு சங்கர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்பில் சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், ‘‘சென்னையைச் சேர்ந்த யுடியூபரான சவுக்கு சங்கர், பெண்கள் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.
அதன் பேரில், சைபர் க்ரைம் போலீஸார், தகாத வார்த்தையில் பேசுதல், பெண்களை அவதூறாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்தனர்.
தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டன. அது தொடர்பாக, சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டு, தொடர்ந்து அந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சவுக்கு சங்கர் மீதான அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, கோவை சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது 15 புதிய வழக்குகளை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் கூறும்போது, ‘‘யுடியூபர் சவுக்குசங்கர் மீது, கோவையில் பதியப்பட்ட முதல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை ஜே.எம்.4-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. தொடர்ந்து புதியதாக பதியப்பட்ட 15 வழக்குகள் தொடர்பாக, தனித்தனியாக குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அவை ஒவ்வொன்றாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மேலும், சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக சாட்சிகள், விசாரித்தவர்கள், புகார் அளித்தவர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டு, அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், 130-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரித்து முடிக்கப்பட்டு விட்டது. தேவைப்பட்டால் சவுக்கு சங்கரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும்’’என்றனர்.