சென்னை: சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வுடன் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
தமிழகத்தில் காலநிலை மாற்றம் மழை உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளுக்கு உத்தரவு: சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வுடன் ஏற்படும் இத்தகைய காய்ச்சல் பாதிப்பின் தன்மையை கண்டறிவதற்கான பரிசோதனையை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனை முடிவை விரைந்து அளித்து, பாதிப்புக்கு ஏற்ற உடனடி சிகிச்சை அளிப்பதுடன், காய்ச்சல் பாதிப்பு குறித்து தெரிவிக்கும்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காலநிலை மாற்றம், மழை போன்ற காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு உகந்த காலநிலையாக உள்ளது. இருமல், காய்ச்சல், தலைவலி, சளி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.
இத்தகைய காய்ச்சல் முதியவர்களை அதிகம் பாதிக்கிறது. யாரும் சுயமாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் எத்தனை நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இதுவரை மக்கள் அச்சப்படும் வகையிலான காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை.
கூட்டத்தை தவிர்க்க வேண்டும்: காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இருமலின் போது கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் நோய் பரவல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது. காய்ச்சல் பாதித்தவர்கள் திருமண நிகழ்ச்சிகள், கூட்டமான நிகழ்ச்சிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.