சென்னை: சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி சாதகமான தீர்ப்பு வெளிவந்தது.
இந்த வெற்றியைக் குறிப்பிட்டு, மாநிலங்களவை திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல் கல். 2021 ஜூலை 29 அன்று, அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27 சதவீதம் இடஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள். முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டிய வழியில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம்.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்ததன் மூலம், ஆண்டுதோறும் இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் 4,022 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில் 1,000 இடங்களும் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
முதல்வரின் இந்தப் பணி மகத்தானது மட்டுமல்ல, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சாதனை பயணம் தொடரட்டும், சமூக நீதி தீர்ப்பு சிறக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘20,088 இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு. சதிக்குக் கால் முளைத்து சாதியாகி, உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது என சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்.
சமூக நீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்’’ என தெரிவித்துள்ளார்.