சென்னை: சமூகநீதி என்றால் என்ன என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை அதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி நாகமோகன்தாஸ் ஆணையம், அம்மாநில முதல்வர் சித்தராமய்யாவிடம் தாக்கல் செய்திருக் கிறது. பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாட்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் உறங்கி கொண்டிருக்கிறது. சமூகநீதியின் அடிப்படை அதை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என புரிந்து கொண்டு கர்நாடக அரசு செயல்படுகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக்கூட சமூகநீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் ஒரு துரும்பை கூட தமிழக அரசு கிள்ளிப்போட வில்லை. வன்னியர்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு 937 நாட்களாகின்றன.
இதுவரை 6 முறை காலநீட்டிப்பு வாங்கியதைத் தவிர வேறு எதையும் ஆணையம் செய்யவில்லை. அதனால் தான் முதல்வர்ஸ்டாலினை சமூகநீதியின் எதிரி என குற்றம்சாட்டி வருகிறேன்.
உண்மையாகவே சமூகநீதி என்றால் என்ன என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவிடம் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். சமூகநீதிக்கு மேலும், மேலும் துரோகம் செய்யாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.