கோயில்களில் தரிசனக் கட்டணம் மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பொருளாதார தீண்டாமை திணிக்கப்படுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லஞ்சம் வாங்கிய அறநிலையத் துறை உதவி ஆணையர் இந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் அதிக ஊழல், முறைகேடு மற்றும் வழக்குகளை சந்திக்கும் துறையாக அறநிலையத் துறை முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. மற்ற துறைகளில் மக்களுக்கு சாதகமாக முறைகேட்டில் ஈடுபடத்தான் லஞ்சம் வாங்குவார்கள். ஆனால், இந்து சமய அறநிலையத் துறையில் கோயிலுக்கு தானமாக கொடுப்பதற்கு மக்களிடம் லஞ்சம் வாங்கும் விநோதத்தை இங்குதான் பார்க்க முடியும்.
கோயில்கள் சேதம்: மூவாயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் என மார்தட்டுகிறார் அமைச்சர் சேகர் பாபு. அறநிலையத் துறைக்கு தனியாக ஸ்தபதி கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் எந்த செயலும் செய்ய முடியும். இந்த செயல்பாடு தரமான நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக்கி ஊழல் செய்கிறார்கள் அமைச்சரும், அதிகாரிகளும். அதனால்தான் கும்பாபிஷேகம் முடிந்து சில நாட்களில், கோயில் சிதிலமடைந்து விடுகிறது.
எவ்வளவு வருமானம் வந்தாலும், தரிசனக் கட்டணத்தை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார் அமைச்சர். இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை சீரழிக்கும் வகையில் தரிசனக் கட்டணம் மூலம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தி, பொருளாதார தீண்டாமையை திணிக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.
எனவே கோயில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறையும், அரசும் வெளியேற வேண்டும். சர்ச், மசூதிகள் இயங்குவதைப்போல தனித்து இயங்கும் சுதந்திர வாரியத்திடம் கோயில்களின் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.