சென்னை: சன் டிவி பங்கு விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், அவரது சகோதரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை, இது வெறும் ஊழல் அல்ல, கோபாலபுரம் குடும்பத்துடைய பேராசையின் வெளிப்பாடு என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வழக்கமாக கோபாலபுரம் குடும்பத்தினர் மற்றும் அவர்களது கூட்டாளிகள், தங்கள் மீதான ஊழலை வெளிப்படுத்தியதற்காக என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.
இந்த முறை கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தி அவர்களில் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
திமுக எம்பி தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை (கோபாலபுரம் குடும்பத்தின் பணம்) மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த மோசடி மூலம் ரூ.6,381 கோடி அளவுக்கு ஈவுத்தொகையை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது வெறும் ஊழல் அல்ல. இது கோபாலபுர குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு. இவர்கள் மக்களிடம் பதில் அளிக்க வேண்டும். சட்டம் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.