சென்னை: “தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. 24 மணி நேரமும் களத்தில் நிற்க வேண்டும்” என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். டிடிவி தினகரன் ஒரு நல்ல தலைவர். எங்களை வழி நடத்தி கொண்டிருப்பவர் நயினார் நாகேந்திரன். எங்கேயும் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இருக்காது. காலம் கனிந்து வரட்டும். கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. 24 மணிநேரமும் களத்தில் நிற்க வேண்டும். திமுக-வுக்கு எதிரி என தவெக, சொல்லிக் கொள்ளும் நிலையில், அதனை அவர்கள் செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள். பாஜக கட்சி தலைவர்களை தினமும் பார்க்க முடியும். பாஜக கட்சி கூட்டங்கள் தினமும் நடக்கும். ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும் என்பது மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பு.
நாங்களே மாற்று எனச் சொல்லும் தவெக, சனிக்கிழமை மட்டுமின்றி, முழு நேர அரசியல் செய்யட்டும். அரசியல் செய்வோர் முழு நேரமாக அரசியலில் பணியாற்ற வேண்டும். களத்தில் ஏழு நாட்களும் செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.