அதிமுக ஆட்சி காலத்தில் (2011 – 2021) சுமார் எட்டாண்டு காலம் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். அப்போது சுகாதாரத்துறைக்கு அமைச்சராக இருந்த இவர், குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி அனுமதி அளித்தது, கரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கினார். இத்தனை சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். திமுக-வும் இவரைக் கண்டும் காணாமல் இருக்கிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயபாஸ்கருக்கு எதிரான பிரச்சினைகளை எல்லாம் அடுக்கி பிரச்சாரம் செய்த திமுக, “கழக ஆட்சி வந்ததும் கம்பி எண்ண வேண்டி இருக்கும்” என கர்ஜனை செய்தது. அதன்படியே ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விஜயபாஸ்கருக்கு எதிராக விறு விறு நடவடிக்கைகள் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வருடம் நான்காகியும் அப்படி எந்த நடவடிக்கையும் பாய்ந்ததாக தெரியவில்லை.
வருமானத்தை மீறிய சொத்துக் குவிப்பு, மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி அனுமதி அளித்த விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக இரண்டு கட்டமாக விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டுகளை நடத்தினர். இதெல்லாம் நடந்து மூன்று வருடங்கள் ஆன பிறகும் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. இதில்லாமல், குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனைகளை நடத்தியது. இது தொடர்பான மேல் நடவடிக்கைகளும் என்ன ஆனதென்று டெல்லிக்கே தெரியவில்லை.
அதேசமயம், தொடர் ரெய்டுகளால் கலவரப்பட்டுப் போன விஜயபாஸ்கர், மத்திய – மாநில அரசுகளை பகைத்துக் கொள்ள முடியாமல் சைலன்ட் ஆனார். அதேபோல், இதையெல்லாம் அவருக்கு எதிரான ஆயுதமாக திருப்ப வேண்டிய திமுக-வும் என்ன காரணத்தாலோ மூச்சுவிடாமல் முடங்கிப் போனது. இதைவிட விநோதம் என்னவென்றால், நடப்பது திமுக ஆட்சியாக இருந்தாலும் இன்னமும் விஜயபாஸ்கர் அரசு ஒப்பந்தங்களை எடுத்து சாலைகள் அமைப்பது, பாலங்களைக் கட்டுவது என படு பிஸியாக இருக்கிறார். எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு தனது கல் குவாரி தொழிலை தொய்வின்றி நடத்துவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் என இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்கள் யாருமே விஜயபாஸ்கரை எந்த மேடையிலும் மருந்துக்குக்கூட விமர்சனம் செய்வதில்லை. அதேபோல் விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை அமைச்சர்களை எக்காரணம் கொண்டும் ஏடாகூடமாக வைவதில்லை. அந்தளவுக்கு இவர்களுக்குள் என்ன டீலோ என அரசியல் தெரியாவதவர்களும் ஆதங்கப்படும் நிலை. அண்மையில் விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதியும் விஜயபாஸ்கரும் ஜோடியாக இணைந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த ‘அரசியல் நாகரிகமும்’ அரங்கேறியது. அந்த சமயத்தில் ரகுபதியை, “அப்பா” என்று அன்பொழுக அழைத்து அனைவரையும் அசரவைத்தார் விஜயபாஸ்கர்.
தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டங்களில் பிஸியாக இருக்கும் விஜயபாஸ்கர், அரங்கக் கூட்டங்களைத் தவிர பொது இடங்களில் அவ்வளவாக அரசியல் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும், “அடுத்து நம்ம ஆட்சிதான். அனைவரும் அதிமுக வேஷ்டியை எக்ஸ்ட்ராவா வாங்கி வெச்சுக்குங்க” எனப் பேசி கட்சியினரை உற்சாகப்படுத்துவதோடு முடித்துக்கொள்கிறார்.
விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையினரின் மேல் நடவடிக்கைகள் என்னானது என்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனிடம் கேட்டதற்கு, “விஜயபாஸ்கர் மீதுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கு விசாரணையில்(!?) உள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை சிறைக்கு அனுப்ப அந்த ஒரு வழக்கே போதுமானது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் நிச்சயம் அவருக்கு தண்டனை கிடைக்கும். அது தெரிந்து தான் அவர்கள் வாய்தா மேல் வாய்தாவாக வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார். ‘சொல்லுதல் யார்க்கும் எளிய…’ என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர்!