சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்தவர் இந்திரா. மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்கு 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக, அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல, மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணியன், வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் ஆகியோரது வீடுகள் உட்பட சென்னையில் 5 இடங்களில் சோதனை நடந்தது. இரவு வரை நீடித்த சோதனையில் சட்டவிரோதபணப் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.
ஹரியானா மாநிலத்தில் நடந்து வரும் ஒரு வழக்கு தொடர்பாக சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகு, இதுகுறித்த விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.