சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சார்பில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களுக்கு ஆளான 24 பேரின் குடும்பத்தினர்கள் இதில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். ‘சாரி வேண்டாம், நீதி வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது விஜய் பேசியதாவது: அஜித்குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கோரினார். அது தவறு அல்ல. ஆனால், திமுக ஆட்சியில், போலீஸ் விசாரணையின்போது 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பங்களுக்கும் நிவாரணம் தர வேண்டும். சாத்தான்குளம் ஜெபராஜ், பெனிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ‘இது தமிழக காவல் துறைக்கு அவமானம்’ என்றார். இப்போது ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையான சிபிஐக்கு வழக்கை மாற்றி அவர்கள் பின்னால் ஒளிந்துகொள்வது ஏன்?
அண்ணா பல்கலைக்கழக வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை அனைத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு திமுக அரசை கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டுமென்றால் நீங்கள் எதற்கு, ஆட்சி எதற்கு, முதல்வர் பதவி எதற்கு. வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, இப்போது ‘சாரி மா’ மாடல் அரசாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கை நீங்கள் சரிசெய்யாவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வெயிலின் தாக்கத்தாலும், கூட்ட நெரிசலாலும் ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீஸாரும், தொண்டர்களும் மீட்டு முதலுதவி அளித்தனர். ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுக்க ட்ரோன் பறக்கவிடப்பட்டது. இதற்கு அனுமதி பெறாததால் போலீஸார் ட்ரோனை பறிமுதல் செய்தனர்.