சென்னை: அதிமுக வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இதன் நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தல் பணிகளில் அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உட்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, திமுகவின் பொய் வாக்குறுதிகள் மற்றும் திமுக ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக்கூற வேண்டும். மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்களை விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும்.
பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்காக, கட்சி ரீதியிலான ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொறுப்பாளர்கள் அனைவரும், அவரவர் மாவட்டங்களுக்கு சென்று, தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
`எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று சூளுரைத்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பாக நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி களப்பணி ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.