சிவகங்கை: ‘சசி தரூர் எம்.பி-க்கு காங்கிரஸ் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. குறித்த கோரிக்கையை காங்கிரஸ் வைக்கவில்லை. அதனால், எங்களுக்கு ஏமாற்றமில்லை. திமுக, காங்கிரஸ் இடையே நல்ல உறவு உள்ளது. சசி தரூர் சிறந்த சிந்தனையாளர், 4 முறை எம்.பி-யாக தேர்வானவர். அவருக்கு கட்சி உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் தான் கூட்டுறவு வங்கிகள் வருகின்றன.
அதனால் அங்கும் நகைக் கடன் பெறுவதில் சிரமம் உள்ளது. பாஜக அரசு இருக்கும் வரை சிரமம் இருக்கத்தான் செய்யும். எனவே, இந்த விதிமுறை களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாஜகவுக்கு தமிழக மக்களிடம் பெரிய அளவு ஆதரவு இல்லை. அண்ணாமலை இருந்தபோது பாஜக ‘ஐ.டி.’ அணி துரிதமாகச் செயல்பட்டது.
தற்போது ஐ.டி. அணி செயல்பாடு குறைந்ததால், கட்சி செயல்பாடு இல்லாதது போல் உள்ளது. அதிமுக கடைக்கோடி தொண்டன் பாஜக கூட்டணி யை விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதலில் முதல்முறையாக இந்துக்களை மட்டும் குறித்து வைத்து கொலை செய்துள்ளனர். இதை மற்ற தாக்குதலோடு ஒப்பிட முடியாது.
அதனால், ஆபரேஷன் சிந்தூரை காங்கிரஸ் வரவேற்றது. அதே சமயத்தில் ஜனநாயக ரீதியாக சில கேள்விகளை கேட்டால், எங்களை தேச விரோதிகள் என்று கூறுவது தவறு. எங்களின் நியாயமான கேள்விகளை கேட்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேணடும்” என்று அவர் கூறினார்.