கல் குவாரி, மணல் குவாரி பஞ்சாயத்துகளில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், வறுமை மீட்புக்காக வழங்கப்பட்ட கல் உடைப்பு உரிம விவகாரத்தை வைத்து தேனி மாவட்டத்திலும் அண்மையில் ஒரு கொலை நடந்திருக்கிறது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு அமைந்துள்ளது. இதில், மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் அதிகம் உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களின் வறுமையை போக்கும் விதமாக இந்தக் கரட்டில் கல் உடைத்து வருவாய் ஈட்டிக் கொள்ள அரசே அனுமதி அளித்தது. இதற்காக இந்தக் கரட்டுப் பகுதியை ஆறு பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு குழுவினர் கற்களை வெட்டி எடுத்து விற்று வந்தனர்.
இந்நிலையில், இப்பகுதி மேகமலை புலிகள் காப்பகமாக 2021-ல் அறிவிக்கப்பட்டதால் சங்கிலிகரட்டில் கல் உடைக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இங்கு கல்லுடைத்து வந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் கோரிக்கை எழுப்பினர். இவர்களுக்கு பெரிய அளவில் பொருளாதாரப் பின்னணி இல்லாததால் இவர்கள் பெயரைச் சொல்லி இப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கல்குவாரியை மீட்கும் வேலைகளில் இறங்கினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இப்பகுதி மீண்டும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதையடுத்து 2022 முதல், மீண்டும் கல் உடைக்கும் பணி தொடங்கியது. இம்முறை மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் கல் உடைக்க அனுபவ பாத்தியம் உள்ள சிலருக்கும் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு அரசியல் புள்ளிகளே கல்குவாரிகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், அனுபவ பாத்தியக்காரரான சசிகுமார் என்பவர் அதிகாரப் புள்ளிகளுக்கு கட்டுப்படாமல் தாங்களே கல் உடைத்து விற்பனை செய்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார். சசிகுமார் தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கம்பம் நகரச் செயலாளர் என்பதால் இவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியும் களத்தில் குதித்தது. இதையடுத்து, எதிர்த்தரப்பானது பேச்சுவார்த்தைக்காக சசிகுமாரை அழைத்திருக்கிறது. அப்படிப் பேச்சுவார்த்தைக்குப் போன இடத்தில் தான் சசிகுமாரை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள்.
இந்தக் கொலைக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தலைதூக்கியதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க கல்குவாரிகளை தற்காலிகமாக இழுத்து மூடியிருக்கிறது அரசு.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்டத் தலைவர் ராஜ்குமார், “250 ஏக்கர் கொண்ட இந்த சங்கிலிக்கரடில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து அவர்களுக்கு கல் உடைக்கும் உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், காலப் போக்கில் இந்தக் குவாரிகளானது திமுக-வைச் சேர்ந்த குரு இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டன. அனுபவ பாத்தியக்காரர்களில் ஒருவரான சசிகுமார் தனது உரிமையை அவர்களுக்கு விட்டுத்தர மறுத்ததால் அவரை பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி கொலையே செய்துவிட்டார்கள்” என்றார்.
சசிகுமார் கொலையில் சின்னச்சாமி, குரு இளங்கோ, ராஜாமணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்திருக்கிறது போலீஸ். ஏழைகளின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட கல் குவாரி உரிமையை அரசியல்வாதிகள் கைப்பற்றிக் கொண்டு கேரளாவுக்கு கனிம வளத்தைக் கடத்தி கொள்ளை லாபம் சம்பாதிப்பது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடப்பதாகச் சொல்பவர்கள், “பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறபோது யாரால் என்ன செய்ய முடியும்?” என்று ஆதங்கக் கேள்வி எழுப்புகிறார்கள்.