தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக திமுக-வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி உள்ளார். துணை தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்ற ராஜு உள்ளார். கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில் நகராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.
திமுக உறுப்பினர்களும் நகராட்சி தலைவர் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்றும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கரன்கோவில் நகராட்சி கூட்டங்களில் உறுப்பினர்கள் அடிக்கடி வாக்குவாதம், வெளிநடப்பு செய்து வந்தனர். போதிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் நகராட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ, சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆனையாளரிடம் மனு அளித்துள்ளனர்.
சங்கரன்கோவில் நகராட்சி தலைவருக்கு எதிராக ஏற்கெனவே இதே போன்று உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு அளித்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினர். இந்த நிலையில், மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உறுப்பினர்கள் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.