சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், வேலூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 7 செ.மீ., சின்கோனாவில் 6 செ.மீ. மழை பதிவாகியது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 101 பாரன்ஹீட் டிகிரி அளவில் இருக்கும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 17-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதுதவிர, தென்மேற்கு வங்கக் கடலில் சில பகுதிகளில் வரும் 16-ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.