சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். தமிழர்களின் பாரம்பரிய இசையையும் கலைகளையும் அழிக்க நினைக்கும் செயலை உடனடியாக கைவிட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை நகரின் முக்கிய பகுதியான வட மதுரையில் மிகவும் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடியார்களுக்கு சிவபெருமான் விருந்தளித்த புனித தலமாக இது கருதப்படுவதால் விருந்தீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் பூஜை நடைபெறும் வேலைகளில் ஆரம்ப காலம் முதலே சிவ வாத்தியம், கைலாய வாத்தியம் போன்றவை இசைக்கப்படுவது மரபு ஆகும்.
தற்போது அந்த கோவிலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோவில் உட்பிரகாரம் மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம், கைலாய வாத்தியம் போன்றவை அனுமதி இல்லை, இப்படிக்கு கோவில் நிர்வாகம் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்கச் செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
இதையெல்லாம் போற்றி வளர்க்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, அதை அழித்து வருவது வேதனைக்குரியது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட விருந்தீஸ்வரர் கோவிலில் இசைவாத்தியங்கள் அனுமதிக்கப்படாது என்ற அறிவிப்பை பார்த்து பொதுமக்களும் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் பல சிறப்பு பெற்ற பழங்கால கலைகள் அழிந்து வருகிறது. சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வர கச்சேரி, சிவ வாத்தியம் இன்னும் நூற்றுக்கணக்கான கலைகள் படிப்படியாக மறைந்து மேற்கத்திய கலாச்சாரம் புகுத்தப்பட்டு வருவது, அதற்கு இந்து சமய அறநிலையத்துறை உடந்தையாவது வேதனையானது.
இந்த கலைகளை பாதுகாப்பதற்காக தான் நம் முன்னோர்கள் கோவில்களை கலைகள் வளர்க்கும் இடமாக பயன்படுத்தினர். பல பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில் இறைவனை பாடுதல், இசைக்கருவிகளை இசைத்தல், பரதநாட்டியம் போன்றவற்றை வளர்ப்பதற்காக தனியாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்றும் கூட ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற கோவில்களில் இத்தகைய மண்டபங்களைக் காணலாம்.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை நிர்வாகம் செய்ய ஆரம்பித்த பிறகு நமது மன்னர்களும் முன்னோர்களும் கலைகளை வளர்ப்பதற்காக கட்டிய மண்டபங்கள் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் காட்சி பொருளாக இருக்கிறது.
ஒருபுறம் கோவிலுடைய வருமானத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை, கோவிலின் நிர்வாக வசதிக்காக அடிப்படை மேம்பாட்டிற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மறுபுறம் கோவிலினுடைய ஆகம விதிகள் மீறப்படுவது, தரிசன கட்டணத்தால் பக்தர்களை சிரமப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இன்னொரு புறம் கோவில் வழிபாட்டு விஷயங்களில் தலையிட்டு பண்டைய மரபுகள் அழிக்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழனி மலைக்கு மேல் இசைவாத்தியங்களை முழக்கி வரக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தடை செய்தது. சென்ற வருடம் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை பக்தர்கள் கூட்டு வழிபாடாக உச்சரிக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் தடுத்தது.
இதுபோன்ற சம்பவங்களால் ஆன்மீகவாதிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி கோவிலின் பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக அழித்து வரும் திராவிட மாடல் அரசு, சிறுபான்மை வழிபாட்டு உரிமையில் அவர்களின் பழக்க வழக்கங்களில் தலையிட முடியுமா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
தேவாரம், திருவாசகம் பாடும் ஓதுவார்களை பல கோயில்களில் இப்போது காண முடிவதில்லை. அவர்களுக்கான வசதியை அறநிலையத்துறை செய்து தருவதில்லை. இப்படி ஒவ்வொன்றாக இந்து கோவில்களின் பாரம்பரியங்களை அழிக்க நினைக்கும் தமிழக அரசு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடியார்களால் பாடல் பெற்ற திருத்தலங்களும், இசையால் இறைவனை கண்ட திருத்தலங்களும் நிரம்பியுள்ள தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்த வாத்தியங்களை கோவிலில் வாசிக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும்.
கோவை விருந்தீஸ்வரர் கோவில் மட்டுமல்லாது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது எனவும் இசைவாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது எனவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.