கோவை: மின்கட்டண உயர்வை திரும்பப் பெறத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கோவை ‘கொடிசியா’ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜேஷ் லுந்த், ‘டீகா’ தலைவர் பிரதீப், டான்சியா துணைத் தலைவர் சுருளிவேல், டாக்ட் தலைவர் ஜேம்ஸ், காட்மா தலைவர் சிவக்குமார், லகு உத்யோக் பாரதி மாநில பொதுச் செயலாளர் கல்யாண் சுந்தரம், கொசிமா தலைவர் நடராஜன், சிஐஏ தலைவர் தேவகுமார், கிரில் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரவி, காஸ்மாபேன் தலைவர் சிவசண்முக குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு ஜூலை 1-ம் தேதி முதல் 3.16 சதவீத மின்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள 50 தொழில் அமைப்புகள் மற்றும் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான 35 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மின்கட்டண உயர்வு தொழில்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
எனவே முதல்வரிடம் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரிக்கை விடுக்கலாம் எனக் கோவையில் 34 மற்றும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 21 அமைப்பினர் இணைந்து முடிவு செய்துள்ளோம்.
கடந்த 2022-ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக நிலை கட்டணம் அதாவது மாதந்தோறும் மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் செலுத்தும் வாடகை போன்ற நிலை கட்டணம் 4.30 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டன.
இந்நிலையில் ஆண்டுதோறும் தொடர்ந்து மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தொழில்துறையினருக்கு இவ்வாண்டு ஜூலை முதல் உயர்த்தப்பட்ட 3.16 சதவீத மிகக் கடுமையாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2022-ம் ஆண்டு மின்கட்டண உயர்வு காரணமாக அந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 5 சதவீதம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆண்டுதோறும் 1 சதவீத தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேற்கூரை சூரியசக்தி ஆற்றல் மின்னுற்பத்தி என்பது நாங்கள் எங்களுக்குச் சொந்தமான கட்டிட மேற்கூரையில் மின்னுற்பத்தி செய்வதாகும். நாங்கள் உற்பத்தி செய்து நாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு நெட்வார்க் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்த நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் கட்டமைப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட தொழில்துறையினரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.