கோவை: கோவை மாநகரில் சாலையோர பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர், தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரவில்லை என்றால் புகாா் தெரிவிக்கவும் பிரத்யேக எண்களை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று (ஆக.2) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளில், வீதிகள் வாரியாக குப்பையை (திடக்கழிவுகள்) மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக, தள்ளுவண்டிகள், பேட்டரி வண்டிகள், இலகுரக வாகனங்கள் ஆகியவற்றின் மூலமாக சேகரிக்கப்படுகிறது.
இந்த அனைத்து வாகனங்களுக்கும், தனித்தனியாக வீதிகள் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு, அந்தந்த வாகனங்களுக்கு தனித்தனியாக கழிவு சேகரிப்பதை பாதை வரைபடம் அளிக்கப்பட்டு, அதனடிப்படையில் குப்பை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த வாகனங்கள் சரியாக ஒதுக்கப்பட்ட வீதிகளில், ஒதுக்கப்பட்ட நேரத்தில் குப்பை சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனவா என தினமும், காலை, மாலை நேரங்களில் ஆணையர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மூலம் கள ஆய்வு நடத்தப்படுகிறது.
மேலும், அனைத்து வீடுகளிலும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும், எந்த வீடுகளிலும் குப்பையை வாங்காமல் இருக்கக்கூடாது என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பொதுமக்களும் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும், குப்பையை சாலையோர பொதுவெளியில் கொட்ட வேண்டாம். பொதுவெளியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். தங்களது வீதிகளில் குப்பை சேகரிப்பு வாகனங்கள் எத்தனை மணிக்கு வரும் என்பதை தங்களது வார்டு அலுவலகம், சுகாதார மேற்பார்வையாளர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்களது வீதிகளில் குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை என்றால், கிழக்கு மண்டலம் 89258-40945, வடக்கு மண்டலம் 89259-75980, மேற்கு மண்டலம் 89259-75981, தெற்கு மண்டலம் 90430-66114, மத்திய மண்டலம் 89259-75982 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும், அந்தந்த வார்டு அலுவலகங்களில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்தும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.