கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த வெடிகுண்டு சம்பவத்தை, தடை செய்யப்பட்ட அல் – உம்மா பயங்கரவாத அமைப்பினர் அரங்கேற்றினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிந்து ஏராளமானோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய பலர், தற்போதும் கோவை மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் சாதிக் என்ற ராஜா என்ற டெய்லர் ராஜா. சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பான வழக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையிலான கோவை மேற்கு மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பல்வேறு தகவலின் அடிப்படையில் டெய்லர் ராஜா, கர்நாடகா மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் கர்நாடகா மாநிலத்துக்குச் சென்று அங்கு தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.