கோவை: கோவை – கடைவீதி காவல் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தற்கொலை கொண்ட விவகாரம் தொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் துறைக்குட்பட்ட கடைவீதி காவல் நிலையம் வைசியாள் வீதியில் உள்ளது. இங்கு சட்டம் – ஒழங்கு, விசாரணைப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு நேற்று (ஆக.5) நள்ளிரவு பணியில் இருந்த தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு தெரியாமல், அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் ஒருவர், உதவி ஆய்வாளரின் அறைக்குள் நுழைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இன்று (ஆக.6) காலை இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், துணை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் பேரூர் அருகேயுள்ள சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) எனத் தெரிந்தது. திருமணமாகாத அவர், பேரூரில் தனது சகோதரி குடும்பத்தினருடன் தங்கி, கட்டுமான வேலைக்குச் சென்று வந்த தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
இவர் தன்னை யாரோ தாக்க பின்தொடர்வதாக கூறி, காவலர் செந்தில்குமாரிடம் நள்ளிரவில் புகார் தெரிவித்துள்ளார். அவர் விசாரித்து அனுப்பிய பின்னர், அவருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து அறிவொளி ராஜன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை ஜே.எம்.5-வது மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தினர். வருவாய்த் துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடைவீதி போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக தலைமைக் காவலர் செந்தில்குமார், விசாரணைப் பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் இன்று மாநகர ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

‘லாக்கப் டெத் கிடையாது’ – முன்னதாக, இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் கூறும்போது, ‘‘பணியிலிருந்த காவலருக்கு தெரியாமல், சாலையை பார்த்தவாறு உள்ள முதல் தளத்தின் படிக்கட்டில் ஏறி அறிவொளி ராஜன் உள்ளே நுழைந்து, விசாரணைப் பிரிவு உதவி ஆய்வாளரின் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு, தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தான் இந்த விஷயமே தெரியவந்துள்ளது.
இதை லாக்கப் டெத் எனக் கூற முடியாது. இது காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை வழக்காகும். அறிவொளி ராஜன் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தன்னை யாரோ பின்தொடர்வதாகவும், தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினரிடமும் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நபர் 11.04 மணிக்கு டவுன்ஹாலில் உள்ள புறக்காவல் நிலையத்துக்குள் நுழைந்து 10 நிமிடம் அமர்ந்துள்ளார். 11.16 மணிக்கு ஒப்பணக்கார வீதி போத்தீஸ் நோக்கி ஓடியுள்ளார். 11.18 மணிக்கு பிரகாசம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளார். 11.19 மணிக்கு கடைவீதி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.