கோவை: ‘பைக் டாக்ஸி’ மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
கோவை டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை மற்றும் புகார்கள் அடிப்படையில் கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் ந.அழகரசு உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கோவை (மையம்) விஸ்வநாதன் தலைமையில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள்(கார்கள்) 6 வாடகைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் 12 இருசக்கர வாகனங்கள் ‘ரேபிடோ’ செயலி மூலம் வாடகைக்காக இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988 விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.1.8 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடந்து நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.