சென்னை: கோயில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் இதுகுறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று (ஜூலை 8) இரண்டாவது நாளாக கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியபோது, “கோயிலைக் கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் எல்லாம் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அது அறநிலையத் துறைக்கு போய் சேர்கிறது. கோயிலை அபிவிருத்தி செய்து, விரிவுப்படுத்துவதற்குத்தான் நீங்கள் பணம் போடுகிறீர்கள். ஆனால் அந்த பணத்தை எடுத்துக் கல்லூரி கட்டுகிறார்கள்.
அறநிலையத் துறையில் இருந்து பணத்தை எடுத்து எதற்காக அதற்கு செலவு செய்ய வேண்டும். கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். ஆனால் அந்த கல்வியை அரசாங்கத்தில் இருந்தே கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்திடம் பணம் இல்லையா? அதிமுக ஆட்சியில் இத்தனை கல்லூரிகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அவை அனைத்தும் அரசாங்கப் பணத்தில் கட்டப்பட்டது. ஆனால் நீங்கள் அறநிலையத் துறை பணத்தை எடுத்து இதற்கு செலவழிப்பது எந்தவிதத்தில் நியாயம்? இவை அனைத்தையும் சதிச் செயலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 10 கல்லூரிகளுக்கு தேவையான பணம் அரசிடம் இல்லையா? சாதாரண கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பதற்கே அரசிடம் பணம் இல்லை என்றால் இந்த அரசாங்கம் நமக்கு தேவையா?” என்று அவர் பேசினார்.
பழனிசாமியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அரசின் முயற்சியை வரவேற்பதற்கு பதில் சதிச்செயல் என்று பேசுவது எப்படி நியாயமாகும்? என்ற ரீதியில் திமுகவினர் பலரும் பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக தொழில்நுட்ப அணியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “வழக்கம் போல இபிஎஸ் உரையை, தங்கள் அரசியலுக்கு தக்கவாறு திரித்து, அவதூறு பரப்பி வருகின்றன திமுக-வும் அதன் சார்பு ஊடகங்களும். “மனிதனுக்கு கண் போல, நாட்டுக்கு கல்வி முக்கியம்” என்ற நிலைப்பாடு கொண்டு, தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை கட்டமைத்த இயக்கம் அதிமுக.
“கல்வியைக் கொடுக்க அரசிடம் பணம் இல்லையா? அரசின் கல்வித் துறைகளில் கல்விக்கு தேவையான பணம் இல்லையா? கல்லூரிகள் அமைக்க உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா?” என்ற பொருளில் இபிஎஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாததால் இப்படி அவதூறில் இறங்கியுள்ளனர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.