சென்னை: ‘கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு, அங்கேயே வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா?’ என்று பழனி சாமிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.
அந்தக் காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின்மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.
தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தான் ஆட்சிக்கு வந்தபிறகு கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு கோயில் நிலத்தை சொந்தமாக்கி அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.
ஏற்கெனவே சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் வக்பு வாரியச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்தவர் பழனிசாமி. தற்போது தமிழகத்தில் பல கோயில்களும் கோயில் நிலங்களும் வக்பு போர்டுக்குச் சொந்தமானது என சொல்லி ஆக்கிரமிக்க முயலும் சிறுபான்மையினருக்கு இது ஆதரவாக அமையாதா? கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்லும் பழனிசாமி, வக்பு நிலங்களிலும், கிறிஸ்தவ நிறுவனங்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான நிலங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என்று சொல்ல முடியுமா? ஆகவே பழனிசாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.