சென்னை: கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவது சமுதாயத்தின் மீதான மறைமுக தாக்குதல் என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில்களின் நிதியிலிருந்து திருமண மண்டபம் கட்டும் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கோயில் நிதியும், கோயில் நிலமும் கோயிலுக்கும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம்.
ஆனால் தமிழக அரசு ஒவ்வொரு முறையும் சட்டத்தை மீறும் வகையில் கோயில் நிதியில் அரசு சம்பந்தப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறது. இது இந்து சமுதாயத்தின் மீது நடத்தப்படுகின்ற மறைமுகத் தாக்குதலாகும். தமிழக அரசு இந்து கோயிலை மட்டும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதனுடைய வருமானத்தை சீரழிக்கிறது.
பக்தர்களின் பயன்பாட்டுக்கு அல்லாத கட்டிடங்களை கட்டி அதன் மூலம் மிகப் பெரிய அளவில் கோயில் நிதியை ஊழல் செய்ய அரசு நினைப்பதாக பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். கோயிலையும், கோயில் நிதியையும் அழித்தால் தானே இந்து சமுதாயம் அழியும் என்பதை புரிந்து இந்த சதி நடக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.