சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோயில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்? என்று நியாயமான ஒரு கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டிருந்தார். பழனிசாமி, கோயில் நிதியை கல்விக்காக செலவழிக்கக் கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக பேசுகிறார் என வழக்கம் போல ஸ்டாலினும், திமுகவினரும், திசை திருப்பி வருகின்றனர்.
கோயில் நிதியில் கல்லூரி கூடாது என்று பழனிசாமி கூறவில்லை. அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாதது ஏன்? என்ற கேள்வியை தான அவர் முன்வைக்கிறார். கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கல்லூரி கட்டிடத்தை பிரமாண்டமாக கட்டிவிடலாம். ஆனால், அதை தொடர்ந்து நடத்திட, தேவையான நிதி ஆதாரத்தை அந்த கோயிலின் வாயிலாக பெறுவது என்பது, தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாக உள்ளது.
இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள், சொத்துகள், வாடகை விவரங்கள், வாடகையின் நிலுவைத் தொகைகள், கோயில் நிலங்களின், சொத்துகளின் சட்டவிரோத பரிமாற்றங்கள், இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், மிக முக்கியமாக கோயில் நிலங்களுக்கும், சொத்துகளுக்கும் தற்போதைய சந்தை மதிப்பில் குத்தகையும் வாடகையும் வசூலித்தால் வரக்கூடிய நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து முழுவதுமாக வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
கோயில் நிதியில் பள்ளிகள் கல்லூரிகள் கட்டப்பட்டால், அதில் வழக்கமான படிப்புகளோடு, இந்து சமயம் சார்ந்த படிப்புகளும் கட்டாயம் இடம் பெற வேண்டும். மேலும், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி பாடல்களுடன் தொடங்கப்பட வேண்டும். அதேநேரம் கல்வி நிலையங்கள் ஆன்மிகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இதுவே கோயிலுக்கு பணம் கொடுக்கும் பக்தர்களின் எதிர்பார்ப்பு. இந்துக்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.