மதுரை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அவற்றை கோயில்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
முத்துமாரியம்மன் கோயில்.. புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளில் பெரும்பாலானவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பல சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரி அதிகாரிகளுக்கு மார்ச் மாதம் மனு அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொதுவாக கோயில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து, அந்த சொத்துகளிலிருந்து கோயிலுக்கு வருவாய் கிடைக்க, இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் சொத்துகளை பாதுகாக்க அறநிலையத் துறை இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் சொத்துகளை முறையாகப் பராமரிக்கவும், ஆக்கிரமிப்பில் இருக்கும் சொத்துகளை மீட்கவும், கோயில் சொத்து பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதிகாரிகளே பொறுப்பு: இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.மதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும். அந்த சொத்துகளை கோயில் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். இதை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தவறினால் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். மனுதாரரின் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் மீட்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.