சென்னை: கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் கோயில் நிதியில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர். ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் அறநிலையத்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் தாக்கல் செய்த பதில் மனு: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 23 ஆயிரம் கடைகளும், 76,500 கோயில் சார்ந்த கட்டுமானங்களும் உள்ளன. இவற்றின் மூலம் கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் குத்தகை வருமானமாக ரூ.345 கோடி கிடைத்துள்ளது.
ஆனால் போதுமான பாசன வசதி கிடைக்காமலும், நகர்மயமாதல் காரணமாகவும் பெரும்பாலான கோயில் நிலங்களில் இருந்து எந்த வருமானமும் கிடைக்கவில்லை. அந்த நிலங்களைத் தேர்வு செய்து அங்கு திருமண மண்டபங்கள், உணவுக்கூடங்கள், அரங்கங்கள், கடைகள் கட்டுவதன் மூலம் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என்பதாலும், ஆக்கிரமிப்புகளில் இருந்து அவற்றை பாதுகாக்க முடியும் என்பதாலும், கட்டுமானங்கள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த கட்டுமானங்கள் கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அனுமதிகளைப் பெற்று, அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிதியை மீறி கோயில் நிதி பயன்படுத்தப்பட்டது குறித்து விளக்க மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.