சென்னை: கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி என அறநிலையத்துறை தெரிவித்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கை, கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்களின் வாடகை கட்டணம் எங்கே செல்கிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் நிதியில் கட்டிடங்கள் கட்டுவது சம்பந்தமான பொதுநல வழக்கில், அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தில் ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலும்கூட வருவாய் இல்லையா? கட்டிட வாடகை எவ்வாறு நிர்ணயிக்கபட்டுள்ளது? திருமண மண்டப வாடகை, கோயில் இடங்களில் அரசு அலுவலகங்கள் வாடகை எல்லாம் எந்தக் கணக்கில் வருகிறது? கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக டெபாசிட் செய்த வருமானம் எதில் சேர்க்கப்படுகிறது? மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பல கோயில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை பல கோடி வருகிறது.
அவை எங்கே? அறநிலையத் துறையின் தேவையற்ற நிர்வாகச் செலவுகள், ஊழல், முறைகேடுகளால் கோயில் நிதி சுரண்டப்படுகிறது என்பதால் கோயில் வருவாய் காணாமல் போகிறதா? இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில், “நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்” என்ற அறைகூவலை, பக்தர்களிடம் இந்து முன்னணி கொண்டு சேர்க்க இருக்கிறது. இதனால், கோயில் நிர்வாகம் என்ற பெயரில் அரசியல் செய்யும் அராஜகம் முடிவுக்கு வரும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.