சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் இல்லாததால் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு படியேறி செல்ல வேண்டிய நிலையுள்ளது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் தினசரி 300-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இவற்றில் பயணம் செய்கின்றனர்.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய இரு வழித்தடங்களில் உள்ள கோட்டை ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) மற்றும் மின்தூக்கிகள் (லிஃப்ட்) இல்லாததால் பொதுமக்கள் படி ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயலாளர் சு.ஹரிசங்கர் கூறியதாவது: சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரையிலான 3 வழித் தட ரயில் பாதையானது 4 வழித்தட பாதையாக மாற்றப்பட்டு, தற்போது சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கும் இடையே பறக்கும் ரயில் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மின்தூக்கிகள் இல்லாததால் சிரமப்பட்டு படியேறி செல்லும் பயணிகள்.
தலைமைச் செயலகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களில் 80 சதவீதம் பேர் புறநகர் ரயில் சேவையை மட்டுமே பயன்படுத்தி அலுவலகம் வந்து செல்கின்றனர். மேலும், தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ கேன்டீனில் மாதாந்திர பொருட்களை வாங்குவதற்காக ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல், தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள், பாரிமுனைக்கு பொருட்களை வாங்க செல்பவர்களும், அங்குள்ள கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களது போக்குவரத்துக்கு சென்னை கோட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை 4-வது வழித்தட இருப்புப் பாதை அமைக்கும்போதே, கோட்டை ரயில் நிலைய நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என எங்கள் சங்கத்தின் மூலம் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரயில்வே நிர்வாகம் கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4 நடைமேடைகளில் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இதனால், கோட்டை ரயில் நிலையைத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் படியேற மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இவர்களின் நலன் கருதி தமிழக அரசு தென்னக ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளை உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, எங்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு ஹரிசங்கர் தெரிவித்தார்.