சென்னை: “தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக, தினசரி மின்தேவை குறைந்தது. இதனால், தினசரி மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகம் உள்ளதால், மின்தேவையும் அதிகரிக்கிறது. இதன்படி, கடந்த 2024 மே 2-ம் தேதி 20,830 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.
அத்துடன், மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9-க்கு வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது. கடந்த மாதத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் மின்தேவை 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது.
மேலும், கடந்த மாதம் இறுதியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்தது. அத்துடன், கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால், தினசரி மின்தேவை 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஏப்ரல் மாதம் இறுதி முதல் மே மாதம் முதல் வாரம் வரையிலான நாட்களில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இனியும் அதிகரிக்கப் போவதில்லை. அப்படி அதிகரித்தாலும் காற்றாலை மின்சாரம் கிடைத்து விடும் எனவே, மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என்றனர்.