ஊட்டி: கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தடயங்கள் அழிப்பு: கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால், வழக்கை விசாரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை அளித்து விட்டதாலும், தற்போது புலன் விசாரணை நடைபெற்று வருவதாலும், கோடநாடு பங்களாவை எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி மட்டும் ஆய்வு செய்யலாம் என்றும் சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜித்தின் ஜாய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தும் நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.