நாகப்பட்டினம்: நாகையில் இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தை கொள்ளையடிக்கும் திமுகவா, இல்லை தமிழக மக்களின் மனங்களில் இருக்கும் நானா? என்று பார்த்துவிடுவோம்.” என்று திமுகவுக்கு சவால்விட்டுப் பேசியுள்ளார் விஜய். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘மோடியா; இல்லை இந்த லேடியா?” என்று சவால்விட்ட பாணியில் விஜய் திமுகவுக்கு சவால் விட்டுப் பேசியுள்ளார்.
விஜய் பேச்சின் விவரம் வருமாறு: அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
என்றைக்கும் மீனவ நண்பனான விஜய்யின் அன்பு வணக்கங்கள். மீன்பிடி தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாத அனைவருக்கும் பிடித்துப்போன, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கங்கள்.
தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம். ஆனால், இங்கே மீன் பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அதிக குடிசை உள்ள பகுதியும் நாகப்பட்டினமே. இந்த முன்னேற்றத்துக்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்கு மொழியில் பேசிப் பேசி, அதை நாம் கேட்டுக் கேட்டு, நம் காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆண்டது பத்தாதா?. நம் மக்கள் தவிப்பது பத்தாதா?
இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் மதுரை மாநாட்டில் பேசினேன். அதை விமர்சித்தார்கள். நான் இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். இதே நாகையில் 2011-லேயே பிப்ரவரி 22 அன்று இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்றோம். இன்று தவெக என்ற கட்சியாக வந்து நிற்கிறோம். என்றும் மக்களோடு மக்களாக நான் நிற்பேன்.
மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் வேளையில் நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்காகவும் நிற்பது நமது கடமை. மீனவர்கள் நலன் போல் ஈழத் தமிழர்கள் வாழ்க்கையும் முக்கியம். கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக திமுக அல்ல. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பேச நாம் பாசிச பாஜகவும் அல்ல,
நாகப்பட்டின மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அலையாத்திக் காடுகளை பாதுகாக்க வேண்டும். குடும்ப வளர்ச்சி தான் முக்கியமான வேலையாக இருக்கும் கட்சி, மக்கள் தாகம் தீர்க்க காவிரி நீரைக் கொண்டு வந்தார்களா? இங்கே ஒரு அரசு கடல்சார் கல்வி பயிற்றும் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம். இங்கே கடல் உணவுகள் சம்பந்தமாக எந்த தொழிற்சாலையையும் அமைக்கவில்லை.
ஆனால் ஒவ்வொரு முறை வெளிநாட்டு டூர் போய்விட்டு வரும்போதெல்லாம் சிஎம் சிரித்துக் கொண்டே வெளிநாட்டு முதலீடு என்பார். ‘சிஎம் சார்’ வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா?. வேளாங்கண்ணி, கோடியக்கரை, வேதாரண்யம் போன்ற டூரிஸ்ட் இடங்களை முன்னேற்றலாம். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவ டாக்டர் இல்லையாம். நாகப்பட்டினம் புது பஸ்ஸ்டாண்டை சுத்தமாக வைக்கலாம். இங்குள்ள ஸ்டீல் ரோலிங் மில்லை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேலகோட்டை மேம்பாலம் கட்டி 50 வருடமாகிவிட்டது. அதை புதுப்பிக்கலாம்.
நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைகின்றன. அதற்கு சேமிப்புக் கிடங்குகள் கட்டியிருக்கலாம். செய்வோம்; செய்வோம் என்றார்கள் செய்தார்களா?. ஆனால், எல்லாத்தையும் செய்த மாதிரியே பெருமையாகச் சொல்வார்கள்.
நான் கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் மக்களை சந்தித்தேன். பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். டூர் ப்ளான் போட்டபின்னர் சனிக்கிழமை மட்டுமே ஏன் மக்களை சந்திக்கிறீர்கள் என்கிறார்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எந்தவிதமான தொந்தரவும் இருந்துவிடக் கூடாது என்பதாலேயே வார இறுதியில் சந்திப்பது என்று திட்டமிட்டோம். அதேபோல் அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமல்லவா?. அதற்காகவும் தான் ஓய்வுநாளில் பிரச்சாரம் செய்கிறேன்.
எனது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்புக்கான காரணமெல்லாம் சொத்தையாக இருக்கிறது. நான் பேசுவதே 3 நிமிடங்கள் தான். அதற்கும் தடை. அதைப் பேசாதே, இதைப் பேசாதே என்று தடை. அப்போ, நான் எதைத்தான் பேசுவது. நான் பேசச் சென்றபோது அரியலூரில் பவர் கட். திருச்சி போய் பேச ஆரம்பித்தவுடன் ஸ்பீக்கருடன் இணைக்கப்பட்ட ஒயர் கட். சிஎம் சார், ஒரு பிரதமர், ஆர்எஸ்எஸ் தலைவர் வந்தா இந்த மாதிரி கண்டிஷன் போடுவீங்களா. பவர் கட், வயர் கட் பண்ணுவீங்களா?. செய்தால் பேஸ்மென்ட் அதிரும்ல. நீங்கள்தான் அவர்களுடன் மறைமுக உறவுக்காரர்களாச்சே.
சிஎம் சார் மிரட்டிப் பார்க்கறீங்களா? அதுக்கு விஜய் ஆளில்லை. என்ன செய்துவிடுவீர்கள். கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால். சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
எனது கூட்டங்களுக்கு மக்கள் நெருக்கடியாக நின்று கேட்கும் இடத்தைத்தான் ஒதுக்குகிறீர்கள். உங்கள் எண்ணம்தான் என்ன சார்?. நான் ஒரு அரசியல் தலைவன் என்பதை மறந்திடுங்க. தமிழ் மகனா, என் மக்களை, என் சொந்தங்களை நான் பார்க்கச் சென்றால் என்ன செய்வீர்கள். அப்பவும் தடை போடுவீர்களா? வேண்டாம் சார். இந்த அடக்குமுறை, அராஜக அரசியல் வேண்டாம் சார். நான் தனி ஆள் இல்லை சார். நான் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம்.
மறுபடியும் சொல்கிறேன். 2026-ல் இரண்டே இரண்டு பேருக்கு இடையேதா போட்டியே. ஒன்று தவெக – இன்னொன்று திமுக.
பூச்சாண்டி காட்டுவதையெல்லாம் விட்டுவிட்டு நீங்க தில்லா, கெத்தா, நேர்மையா எலக்ஷனை சந்திக்க வாங்க. பார்த்துக்கலாம். கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்தின் கூட்டணியோடு கொள்ளையடிக்கும் நீங்களா, இல்லை தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் நானா? என்று பார்த்துவிடலாம். இனி மேல் தடை போட்டால் நான் மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்வேன்.
எனக்கு தடைபோடும் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா?. உங்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள ஆட்சிக்கு வர வேண்டுமா? ( தொண்டர்கள் தவெக என்று முழங்குகின்றனர்.)
கேட்டதா மை டியர் சிஎம் சார். இந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது. துரத்திக் கொண்டே வரும். தவெகவுக்கு வெற்றி நிச்சயம். நம்பிக்கையாக இருங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.