சென்னை: கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, டிஜிபி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவரான ஏர்போர்ட் மூர்த்திக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் இடையே கடந்த செப்.6 அன்று கைகலப்பு ஏற்பட்டது.
இந்த அடிதடி சம்பவம் தொடர்பாக இருதரப்பும் போலீஸில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் ஏர்போர்ட் மூர்த்தியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஏர்போர்ட் மூர்த்தி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நடந்தது.
அப்போது ஏர்போர்ட் மூர்த்தி தரப்பில், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தன்னை தாக்கியவர்களை விட்டுவிட்டு தன்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.