திண்டுக்கல்: கொடைக்கானலில் பெய்து வரும் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மிலாடி நபி விடுமுறை தொடர்ந்து சனி, ஞாயிறு வாரவிடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் மிதமான மழை மற்றும் சாரல் மழையானது விட்டு விட்டு பெய்துவருகிறது. இதனால் சாரல் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைபிடித்துக்கொண்டும்
தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகியவற்றை ரசித்தனர். மேகக்கூட்டங்கள் கீழிறங்கிவந்து சுற்றுலாபயணிகளை தழுவிச்செல்வதை ரசித்தனர். நட்சத்திர ஏரியில் சாரல் மழையில் படகுசவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
மேல்மலைப்பகுதிகளில் அடர் மேகக்கூட்டங்கள் காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு மேகமூட்டம் காணப்பட்டது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து, ஊர்ந்தப்படி மலைச்சாலையில் காத்திருந்து சென்றன.
கடந்த வாரம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தநிலையில், இந்த வாரம் தொடர் சாரல் மழையால் இதமான தட்பவெப்பம் நிலவி ரம்மியமான சூழல் உருவாகியுள்ளது. தொடர் விடுமுறையில் கொடைக்கானல் சென்றவர்கள். இயற்கை எழில் காட்சியை வெகுவாக ரசித்தனர்.