திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஹோட்டல், காட்டேஜ்கள், ரிசார்ட்கள் ஏராளமாக உள்ளன.
விடுமுறை தினத்தில் அறைகள் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து குடியிருப்புகளையும் தங்கும் விடுதிகளாக மாற்றி வாடகைக்கு விடுகின்றனர்.
இதில், பெரும்பாலான தங்கும் விடுதிகள் சட்ட விரோதமாகவும் , அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது போன்ற தங்கும் விடுதிகள் சம்பந்தமாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250150 மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி மூலமாகவும், 7598578000 என்ற ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ மூலமாகவும் பொதுமக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் புகார் அளிக்கலாம் என திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.