திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குணா படத்தால் பிரபலமான குணா குகை சுற்றுலா மையம், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மவையாளப் படம் வெளியான பிறகு பல்வேறு மாநிலங்களிலும் பெரிதும் பிரபலமடைந்தது.
இதையடுத்து, கடந்த கோடை சீசனில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். சில வாரங்களுக்கு முன்பு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கும், வனத் துறை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் மோகம் காரணமாக தடுப்பு வேலியைக் கடந்து சென்று, ஆபத்தான பகுதியில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குணா குகைப் பகுதியை பார்வையிட வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது பையில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்திருந்தார். அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலாப் பயணி, அவர் வைத்திருந்த பையை பறித்துச்சென்றது. மரத்தின் மீது ஏறி அமர்ந்த குரங்கு, பையில் இருந்த 500 ரூபாய் கட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தாளாகப் பிரித்து வீசியது.
குணா குகை பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் 500 ரூபாய் தாள்கள் பறப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பணப் பையை பறிகொடுத்த சுற்றுலாப் பயணியும், அவருடன் வந்தவர்களும் பொறுமையாகக் காத்திருந்து, மேலிருந்து விழும் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்தனர். மற்ற சுற்றுலாப் பயணிகளும் கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்துக் கொடுத்து உதவினர். சில ரூபாய் நோட்டுகள் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் விழுந்தன. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.