சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வரும் ஜூலை 24 வரை காலக்கெடு விதித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில் கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு, 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரித்து முடிவு செய்யும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
இந்நிலையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் இன்றைக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எஸ்.சவுந்தர், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வை அமைத்து தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவிட்டார்.