மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகஸ்ட் 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற காலக்கெடு விதித்தும், பட்டா இடங்களில் உரிய அனுமதி பெற்று கொடிக் கம்பங்களை அமைக்கலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில், கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு, விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, கொடிக் கம்பங்களை அகற்றும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சௌந்தர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? கொடிக் கம்பங்கள் இடையூறாக இருப்பதாக கருதினால், சிலைகளும் இடையூறு தானே? அனைத்து கொடிக் கம்பங்களையும் அரசு புறம்போக்கு நிலங்களில் ‘கொடி மண்டலம்’ உருவாக்கி அங்கு வைக்கலாம். கொடி மற்றும் கொடிக் கம்பங்களின் அளவு, உயரம், உறுதித்தன்மையை நிர்ணயம் செய்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கலாம்” என்றனர்.
மனுதாரர்கள் சார்பில், “ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் அமைப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அரசியல் கட்சிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாக கொடிக் கம்பங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் கொடி கம்பங்களை அகற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை ஏற்க முடியாது” எனக் கூறப்பட்டது.
அரசு தரப்பில், “இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மட்டும் இல்லாமல், தேசிய கட்சிகளின் கொடி கம்பங்களும் உள்ளன. கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சிலைகளை பொறுத்தவரை ரவுண்டானாவில் அமைக்கப்படுகிறது. இதனால் சிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொடிக் கம்பங்கள் சாலையோரங்களில் அமைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்களிடம் கருத்து கேட்காமல் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என மனுதாரர்கள் தரப்பில் பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்க நீதிமன்றம் முடிவு செய்கிறது.
இதனால், இந்த வழக்கில் இணைய விரும்பும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்கள் ஆகஸ்ட் 5-க்குள் உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் இடையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கபடாது. இந்த வழக்கில் இணைய விரும்பும் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்கள் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக அரசு தலா 2 ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் ஜூலை 25-க்குள் விளம்பரம் வெளியிட வேண்டும். அதுவரை கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 6-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.