மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்கள் என பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு நீதிபதி இளந்திரையன் ஜன.27-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டமேல்முறையீட்டு மனுவை நீதிபதி நிஷாபானு அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்து, வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “இந்த வழக்கில் இணைய விரும்பும் கட்சிகள், அமைப்புகள் ஆக. 5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், “அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால், நீதிமன்ற தடை உத்தரவினால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக, எங்கள் கட்சி கடுமையான பாதிப்பை சந்திக்கிறது.
எனவே, கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்து, இது தொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்டப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.