திமுக-விலும் அதிமுக-விலும் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் மனோகரன். அவர் தனது கையில், எப்போதும் கோல் ஒன்றை வைத்திருப்பார். அதற்குள்ளே அவர் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக் கூட செய்திகள் உண்டு. கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்ஜிஆர் பக்கம் மனோகரன் போனபோது, அவரை ‘மந்திரக்கோல்’ என்று எழுத்துகளில் வசைபாடினார் கருணாநிதி. மீண்டும் அவர் கருணாநிதியின் தம்பி ஆனபோது, அவரை ‘மந்திரக்கோல் மைனர்’ என்று ஜெயலலிதா போன்றவர்கள் கிண்டலடித்தார்கள்.
இப்போது அதுவல்ல விஷயம்… அதேபோன்றதொரு மந்திரக்கோலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் இப்போது கையில் வைத்திருக்கிறார். அண்மையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு மகனையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு வந்த பிரேமலதா கையில் அந்த ‘மந்திரக்கோல்’ இருந்தது.
“இதென்ன புதுசா கையில கோல் வெச்சிருக்கீங்களே?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது ஒண்ணுமில்ல… கட்சித் தொண்டர் ஒருவர் பிரியத்துடன் அன்பளிப்பாக தந்தது. அவர் கேட்டுக்கொண்டதால் இதைக் கையில் வைத்திருக்கிறேன்” என்று சொல்லி கடந்துவிட்டார் பிரேமலதா.
அவர் அப்படிச் சொன்னாலும் அவரது கட்சி வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்த போது, “அண்ணியார் கையில் வைத்திருப்பது சாதாரண கோல் இல்லை. இது கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட விஷேசமான கோல். இதை கையில் வைத்திருந்தால் எதிர்ப்பலைகள் விலகி பாசிட்டீவ் எனர்ஜி கிடைக்கும். இது கையில் இருந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும் என ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
அப்படி தங்களது ஆஸ்தான ஜோதிடர் சொன்னதன் பேரிலேயே அண்ணியார் இந்தக் கோலை கையில் எடுத்துவர ஆரம்பித்திருக்கிறார். இதேபோல், கேப்டன் இருந்த போதும் அவரிடமும் கையில் கருங்காலி கோல் வைத்துக்கொண்டால் நல்லது எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ஏனோ அவர் அந்த யோசனையை ஏற்கவில்லையாம்” என்றனர்.
கடவுள் மறுப்புக் கொள்கையை தீவிரமாகக் கடைபிடித்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சில நேரங்களில் இதுபோன்ற ஆன்மிக நம்பிக்கைகளுக்கு இடமளித்ததாகச் சொல்வார்கள். தனது தோளில் கட்சித் துண்டையும் கருப்புத் துண்டையும் மட்டுமே அணிந்து பழகி இருந்த கருணாநிதி, 1996-ம் ஆண்டு மஞ்சள் துண்டுக்கு மாறினார். ஜோதிடர்கள் சொன்ன பரிகாரத்தின் படியே அவர் மஞ்சளுக்கு மாறியதாக அப்போது சிலர் விமர்சனம் செய்தார்கள்.
ஆனால், கழுத்துப் பகுதியில் தனக்கு ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்துவதற்காகவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி, தான் மஞ்சள் துண்டு அணிவதாகவும், அதை அணிவதன் மூலம் மஞ்சள் துண்டின் வெப்பத்தால் வலி கட்டுப்படும் என மருத்துவர்கள் சொல்லி இருப்பதாகவும் கருணாநிதி விளக்கமளித்தார்.
ஆனால், அதையும் முழுமையாக ஏற்காத ஆன்மிக அன்பர்கள் சிலர், “கருணாநிதி ரோகிணி நட்சத்திரத்தன்று ரிஷப ராசியில் பிறந்தவர் என்பதால் குருபலம் பெறுவதற்காகவே அவர் மஞ்சள் துண்டை அணிகிறார்” என வாதம் செய்தனர். இதனிடையே, “எங்கள் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அளித்த மஞ்சள் சால்வையை அணிந்ததால் தான் கருணாநிதி மீண்டும் அரியணையில் அமர முடிந்தது” என பாமக தரப்பிலிருந்தும் மஞ்சள் சால்வை மகிமைக்கு சொந்தம் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், காலை நேரத்தில் வாக்கிங், சைக்கிளிங் சென்று மக்களைச் சந்தித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடந்த மூன்று வருடங்களாக வாக்கிங் செல்லும் சமயங்களில் கையில் கருங்காலி கோலை வைத்திருக்கிறார். ஆன்மிக நம்பிக்கைகளில் ஸ்டாலினுக்கு நாட்டமில்லை என்றாலும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், ஜோதிடர்களின் ஆலோசனை கேட்காமல் எந்தக் காரியத்திலும் இறங்குவதில்லை. அவரது ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே ஸ்டாலின் தனது கையில் கருங்காலி கோலை வைத்திருப்பதாக ஒருசாரார் சொன்னாலும், “கருங்காலி கோலுக்கு மருத்துவ குணம் இருப்பதாலேயே தளபதி அதைக் கையில் வைத்திருக்கிறார்” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூரைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் “கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட இந்தக் கோலை கரகோல் என்று சொல்லுவோம். பெரும்பாலும் இதை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பரிகாரத்துக்காக பயன்படுத்துவது வழக்கம். செவ்வாய் தோஷம் உள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் பெரிதாக பாதிப்பு இருக்காது.
ஆனால், இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்தால் அது சில கோளாறுகளைக் காட்டும். அப்படியான சிக்கல்கள் வராமல் இருக்க கரகோலை கையில் வைத்திருந்தால் நல்லது என்பார்கள். மற்றபடி, இந்தக் கோலுக்கு வேறேதுவும் விஷேச குணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றார்.
மந்திரக்கோலோ, மருத்துவக்கோலோ தளபதியார் வழியில் இப்போது அண்ணியாரும் அதை கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இருவரும் நினைப்பது இனிதே நிறைவேறுகிறதா என்று பார்க்கலாம்!