தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006-ல் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாசலம், பாமக-வுக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் கேப்டன் தனித்துப் போட்டியிட்டு வென்றதால் தேர்தலுக்கு தேர்தல் இந்தத் தொகுதி தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது. அதுபோல இந்தத் தொகுதி மீதான தேர்தல் கணிப்புகள் இந்தத் தேர்தலுக்கும் இப்போதே பரபரக்க ஆரம்பித்துவிட்டன.
தொகுதிப் பங்கீட்டில் மதிமுக-வுடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் அந்தக் கட்சிக்குப் பதிலாக தேமுதிக-வை திமுக கூட்டணிக்குள் இழுத்துப் போடும் ஆயத்த வேலைகள் இப்போதே நடைபெறுவதாகவும், இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் எஸ்.கே.கதீஷுடன் அமைச்சர் எ.வ.வேலு டச்சில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ஒருவேளை, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் பட்சத்தில் அவர்கள் ரிஷிவந்தியம், விருத்தாசலம் தொகுதிகளை நிச்சயம் கேட்பார்கள் என்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளையும் திமுக தயாராய் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ரிஷிவந்தியம் தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏ-வான வசந்தம் கார்த்திகேயன். அண்மைக்காலமாக ரிஷிவந்தியத்தை விட்டு விட்டு உளுந்தூர்பேட்டை தொகுதியை சுற்றி வருவதும் இதற்கான வெள்ளோட்டம் தான் எனவும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், ஜூலை 28-ம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், “வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியத்தில் தேமுதிக வலுவாக உள்ளது. இந்த முறை விருத்தாசலத்தில் பொதுச் செயலாளர் (பிரேமலதா) போட்டியிட்டால் ஜெயிக்க வைப்பீர் களா?” என தொண்டர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், “வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவோம்” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
பதிலுக்கு, “உங்கள் விருப்பப்படி வெற்றிக் கூட்டணி அமையும்” எனச் சொன்னார் கேப்டன் மகன். இதனைத் தொடர்ந்து இம்முறை விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடப் போகிறார் என்ற பேச்சு தேமுதிக வட்டாரத்தில் இப்போது தீவிரமாக சுற்ற ஆரம்பித்திருக்கிறது.
இதனிடையே, தற்போது காங்கிரஸ் வசம் உள்ள விருத்தாசலம் தொகுதியை மீண்டும் கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது என திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன் இம்முறை புவனகிரி தொகுதியை விட்டுவிட்டு விருத்தாசலத்தில் போட்டியிடப் போவதாக முன்பு செய்திகள் கசிந்தன.
ஆனால், “எக்காரணத்தைக் கொண்டும் புவனகிரியைத் தவிர வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிட மாட்டேன்” என அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அருண்மொழித்தேவன். இதனால், இம்முறையும் விருத்தாசலம் கூட்டணிக்கே போய்விடுமோ என அதிமுக-வினர் அப்செட்டாகி நிற்கிறார்கள்.
இதுதொடர்பாக அருண்மொழித்தேவனிடம் பேசிய போது, “ஆளாளுக்கு யூகங்களின் அடிப்படையில், நான் விருத்தாசலத்தில் போட்டியிடப்போவதாக பேசி வருகின்றனர். அது கிடையாது எனத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படியான செய்திகள் பரவினால் அது என்னை ஜெயிக்கவைத்த புவனகிரி தொகுதி வாக்காளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். மற்றபடி, விருத்தாசலத்தில் அதிமுக போட்டியிடுமா, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பது குறித்து பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்றார் அவர்.
விருத்தாசலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வேல்முருகனோ, “ஒவ்வொரு முறையும் இந்தத் தொகுதியை கூட்டணிக்கே ஒதுக்கிக் கொண்டிருந்தால் கட்சிக்காக உழைக்கும் திமுக-வினருக்கு எப்போது தான் வாய்ப்புக் கிடைக்கும்? அதனால் தான் கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது என தீர்மானமே போட்டு தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம்” என்றார்.
திமுக-வும் அதிமுக-வும் இப்படி குழப்பமான மனநிலையில் இருந்தாலும், யாருடன் கூட்டணி அமைந்தாலும் விருத்தாசலமும் ரிஷிவந்தியமும் நமக்குத் தான் என தெம்பாக நிற்கிறார்கள் தேமுதிக-காரர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் பா.சிவக்கொழுந்து, “கேப்டன் தொகுதியான விருத்தாசலத்தில் தேமுதிக இரண்டு முறை வென்றிருக்கிறது.
இந்தத் தேர்தலில் பொதுச் செயலாளர் போட்டியிட்டால் வெற்றிபெறச் செய்வீர்களா என அவரது மகன் கேட்டிருக்கிறார். நிச்சயம் வெற்றிபெற வைப்போம் என்ற உறுதியை அவருக்குத் தந்திருக்கிறோம். இனிமேல் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது அண்ணியார் தான்” என்றார்.
கேப்டனை முதன்முதலாக கோட்டைக்கு அனுப்பிய தொகுதியில் இம்முறை பிரேமலதா போட்டியிடுவாரா… சொன்னபடி அவரை கேப்டனின் சிப்பாய்கள் ஜெயிக்கவைக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.