திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள வரதராஜநகர் – மணவாளநகர் பாலத்தில் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். ஆகவே, அப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் தெரிவித்ததாவது: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், வரதராஜநகர்- மணவாளநகர் ஆகிய பகுதிகளுக்கு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 300 மீட்டர் நீளமுள்ள பாலம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இப்பாலத்தையும், பாலம் அருகே இருந்த ரயில்வே கடவுப்பாதையையும் கடந்துதான் திருவள்ளூரிலிருந்து, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் சென்னை பகுதிகளுக்கு, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.
இந்நிலையில் சென்னையிலிருந்து, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவள்ளூரை கடந்து செல்வதால், அடிக்கடி ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டு வந்தன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வந்தனர்.
இதனை தவிர்க்கும் வகையில், கூவம் ஆறு மற்றும் ரயில்வே கடவுப்பாதையை எளிதாக கடக்கும் வகையிலும், மணவாள நகரையும், திருவள்ளூர் பகுதிகளை இணைக்கும் வகையிலும் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடி மதிப்பில், சுமார் ஒரு கி.மீ. நீளமுள்ள மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்பாலம், கடந்த 2006-ம் ஆண்டு முதல் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

பாலத்தில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேம்பாலத்தின் கீழ், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள வரதராஜநகர் – மணவாளநகர் பாலத்தை, வரதராஜநகர் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக திருவள்ளூர், மணவாள நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அவ்வாறு சேதமடைந்த பாலம் 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமலும், அகற்றப்படாமலும் உள்ளது.
இதனால், வரதராஜநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், திருவள்ளூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகத்தால், ரயில் தண்டவாள பாதைகளை ஒட்டி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போடப்பட்ட சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், சுமார் 300 மீட்டர் பாலத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், சுமார் ஒரு கி.மீ. தூரம் சுற்றி தான் மணவாளநகர், திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர், எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இடிந்து விழும் நிலையில் உள்ள, சேதமடைந்த பாலத்தில் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். தமிழக அரசு, சேதமடைந்துள்ள வரதராஜநகர் – மணவாளநகர் பாலத்தை அகற்றிவிட்டு, புதியதாக தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.